search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம மக்கள் மறியல்"

    ஊத்துக்கோட்டை அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து 30 கிராமங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கத்தில் 33 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் உள்ளது.

    இங்கிருந்து ஜெ.ஜெ.நகர், லட்சிவாக்கம், பேரண்டூர், சென்னங்காரணி, கண்டிகை, சூளமேனி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் கடந்த ஒருமாத காலமாக தொடர் மின் வெட்டு காரணமாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என்று புகார் எழுந்தது.

    இந்தநிலையில் தொடர் மின்வெட்டை கண்டித்து 30 கிராமங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் விவசாயிகள் கருகிய நெற்கதிர்களுடன் பாலவாக்கத்தில் உள்ள துணை மின் நிலையம் எதிரே நேற்று ஊத்துக்கோட்டை- பெரியபாளையம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் கிடைத்த உடன் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், இன்ஸ்பெக்டர் அனுமந்த், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சமரச பேச்சு வார்தையில் ஈடுபட்டனர்.

    சீரான மின் சப்ளைக்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் சாலை மறியலை விலக்கி கொண்டனர்.

    இதன் காரணமாக ஊத்துக்கோட்டை- பெரிய பாளையம் இடையே சுமார் ½ மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    புத்தாண்டு கொண்டாட்டத்தில் ரகளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செங்காடு பகுதியில் கடந்த 31-ந் தேதி இரவு வாலிபர்கள் சிலர் புத்தாண்டு ரகளையில் ஈடுபட்டு தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

    இதற்கிடையே செங்காடு பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்ற காந்திநகரை சேர்ந்த மாணவர்களை வாலிபர்கள் சிலர் மிரட்டி அனுப்பினர்.

    இதுபற்றி அறிந்த காந்திநகர் பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் இன்று காலை மிரட்டல், ரகளையில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    ஸ்ரீபெரும்புதூர், மணவாளநகர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். கிராம மக்களின் இந்த திடீர் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திண்டுக்கல் அருகே சாலை அமைக்க கோரி கிராம மக்கள் மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியே செல்ல வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஏராளமானோர் இன்று காலை ஒன்று திரண்டனர். பின்னர் கோட்டைபட்டியில் திடீர் என மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்தனர். சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.

    சிறுமலையில் சாலை வசதி கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ள சிறுமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் மலை கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர்.

    பள்ளி மாணவ-மாணவிகளும் ஏராளமானோர் வந்து செல்லும் இந்த சாலையில் தென்மலை, தாழைக்கடை, வேளாண்பண்ணை ஆகிய பகுதிகளுக்குட்பட்ட சாலை வனத்துறையினர் கட்டுப்பாட்டில் வருகிறது.

    இந்த சாலை 3 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தரமற்ற முறையில் இருந்ததால் ஒரே மாதத்தில் சாலை பெயர்ந்து கற்கள் தெரிய ஆரம்பித்தன. இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    தற்போது கஜாபுயலின் தாக்கத்தினால் இந்த சாலை மேலும் உருக்குலைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில் குண்டும் குழியுமாக உள்ளது.

    ஆனால் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மலைச் சாலையில் அரசு பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் ராஜேஸ்வரி, வனத்துறை ரேஞ்சர் மனோஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன், வி.ஏ.ஓ. பிரதாப், ஊராட்சி செயலர் முத்துக்குமார் உள்பட அதிகாரிகள் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்காலிகமாக மண் சாலை அமைத்து விரைவில் தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    நன்னிலம் அருகே கருகும் சம்பா பயிர்களை காப்பாற்ற புத்தாற்றில் தண்ணீர் விடக்கோரி 15 கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். #Farmers

    பேரளம்:

    நன்னிலம் அருகே ஆற்றில் தண்ணீர் விடக்கோரி 15 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஓடும் புத்தாற்று மூலம் அப்பகுதியை சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது. சம்பா சாகுபடிக்காக மேட்டுரில் தண்ணீர் திறந்து ஒரு மாதமாகியும் கடைமடை பகுதியான புத்தாற்றில் இதுவரை தண்ணீர் விடவில்லை என்று விசாயிகள் கூறுகின்றனர்.

    இந்நிலையில் கருகும் சம்பா பயிர்களை காக்க புத்தாற்றில் உடனடியாக தண்ணீர் விடக்கோரி ஆண்டிப்பந்தல், வடகரை, மூலங்குடி, மகிழஞ்சேரி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் இன்று காலை ஒன்று திரண்டனர்.

    பின்னர் அவர்கள் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் ஆண்டிப்பந்தல் என்ற இடத்தில் புத்தாற்று பாலத்தில் காலை 8.30 மணிக்கு அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலுக்கு பா.ம.க., உழவர் பேரியக்க மாவட்ட செய்லாளர் சக்திவேல், தி.மு.க., ஒன்றிய இளைஞரணி செயலாளர் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தகவலறிந்து நன்னிலம் தாசில்தார் பரஞ்சோதி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அருண்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்; காவிரி நீர் திறப்பை நம்பி இப்பகுதியில் சம்பா சாகுபடியை தொடங்கினோம். ஆனால் இப்பகுதி புத்தாற்றில் இதுவரை தண்ணீர் வரவில்லை. தண்ணீர் இல்லாததால் சம்பா பயிர்கள் கருகி வருகின்றன. இதுபற்றி பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. புத்தாற்றில் தண்ணீர் வீடும் வரை மறியல் தொடரும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்; இன்று மாலை 5 மணிக்குள் புத்தாற்றில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

    குத்தாலம் அருகே புதுக்குளத்துக்கு செல்லும் நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தில் நீர் நிரப்பக்கோரியும் கிராமமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். #waterissue

    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கடலங்குடியில் உள்ள புதுக்குளத்துக்கு செல்லும் நீர்வழிப்பாதையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாகவும், உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தில் நீர் நிரப்பக்கோரியும் கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலங்குடி புதுக் குளத்துக்கு செல்லும் நீர்வழிப்பாதையான புதுக்குளம் வாய்க்காலில் சிலர் கற்களைக் கொண்டு தடை ஏற்படுத்தி, தண்ணீர் செல்லமுடியாத நிலையை ஏற்படுத்தி இருந்தனர். இதனால் தற்போது காவிரி ஆற்றில் செல்லும் நீர் புதுக்குளத்துக்கு செல்ல முடியாமல் தடைபட்டது. இந்த ஆக்கிரமிப்பை அகற்றி, புதுக்குளத்துக்கு தண்ணீர் நிரப்ப வலியுறுத்தி பெண்கள் உட்பட அப்பகுதி மக்கள் 50 பேர் கடலங்குடி மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த குத்தாலம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் வந்து கூட்டத்தை கலைத்தனர். தாசில்தார் சபீதாதேவி மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியல் போராட்டத்தால் பூம்புகார்-கல்லணை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. #waterissue

    வத்தலக்குண்டு அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் திடீர் மறியல் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே கோம்பைபட்டி பஞ்சாயத்துக்குட்பட்டது சின்னுப்பட்டி. இந்த பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்டகுடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    மஞ்சளாறு மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களாக குடிநீர் வராததால் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று காலை வத்தலக்குண்டு- உசிலம்பட்டி சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில்குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    காஞ்சீபுரம் அருகே குடிநீர் வழங்க கோரி மதுராந்தகம்- உத்தரமேரூர் செல்லும் சாலையில் பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் 3 பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    மதுராந்தகம்:

    காஞ்சீபுரம் மாவட்டம் தண்டலம் கிராமத்துக்கு 3 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை.

    இது குறித்து ஊராட்சி மன்ற செயலாளர் கோதண்டராமனிடம் தண்டலம் கிராம மக்கள் புகார் செய்தனர். தங்கள் கிராமத்துக்கு 2 கிணறுகளில் இருந்தும் ஆபரேட்டர்கள் சீராக குடிநீர் வழங்கவில்லை.

    எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பிறகும் குடிநீர் சப்ளை முறையாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து 3 மாதங்களாக சீராக அனைத்து குடும்பங்களுக்கும் கிடைக்கும் வகையில் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இன்று காலை மதுராந்தகம்- உத்தரமேரூர் செல்லும் சாலையில் பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் 3 பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் அங்கு சென்ற மேல்மருத்துவத்தூர் போலீசார் பொது மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதுபோல் திருத்தணியை அடுத்த வேலஞ்சேரி காலனிக்கு 35 நாட்களாக குடிநீர் வரவில்லை. இங்கு 350 குடும்பங்கள் உள்ளனர். குடிநீர் வராததை கண்டித்து இன்று காலை 8 மணி அளவில் இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் திருத்தணி-நாகலாபுரம் சாலையில் மறியல் செய்தனர்.

    தகவல் அறிந்ததும் திருத்தணி தாசில்தார் நரசிம்மன், பி.டி.ஓ. லட்சுமணன் ஆகியோர் அங்கு சென்று சமாதானம் செய்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் காரணமாக அங்கு 1 மணிநேரம் போக்குவரத்து பாதித்தது. #Tamilnews
    ×